Font Size

Layout

Menu Style

Cpanel

அமைதி வழி பிரச்சினைகளுக்கு தீர்வு காண்போம்! மாவீரர் தினத்தில் வேதமூர்த்தி உரை

maaveera prayers.jpg
ஜோகூர் பாரு, டிச.4- அமைதி வழியாகம் அகிம்சையைப் பின்பற்றியும் மலேசிய இந்தியர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும் என ஹிண்ட்ராப் அமைப்பின் தலைவர் பொ.வேதமூர்த்தி மலேசிய இந்தியர்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்.

விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பிறந்த தினம் மாவீரர் தினமாக ஜோகூர் பாரு தாமான் நேசா மண்டபத்தில் கொண்டாடப்பட்டது. அவ்விழாவில் ஆற்றிய உரையின்போதே வேதமூர்த்தி மேற்கண்ட வேண்டுகோளினை விடுத்தார்.

நான் லண்டன் நகரில் வழக்கறிஞர் பணி நிமித்தமான கல்வியைத் தொடர்ந்தபோது எனக்கும் இலங்கைத் தமிழர்கள் மீதான பற்றுதல் ஏற்பட்டு விட்டது. 1989 ஆம் ஆண்டு தொடங்கியே இலங்கை தமிழர்கள் எதிர்நோக்கி வரும் இன்னல்களை நான் அறிவேன். பின்னர் மட்டக்களப்பு பகுதியில் போர் நிவாரண பணியின்போதும் மிக அருகிருந்து அவர்களின் சிரமங்களைக் கண்டேன்.

இலங்கைத் தமிழர்களின் வாழ்வாதாரத்தை மலேசியத் தமிழூர்களோடு ஒப்பிடுதல் கூடாது. அங்கே எதுவுமே நிராகரிக்கப்பட்ட பின்னரே அவர்கள் திமிறி எழும் நிலை ஏற்பட்டது. இங்கே நமது தேவைகளுக்கு இன்னமும் நாம் கருத்துகளை வெளிப்படுத்துவதன் வாயிலாக அரசாங்கத்தை நமது திசை நோக்கி திருப்பும் வாய்ப்பு உள்ளது. நமது உணர்வுகள் நிராகரிக்கப்பட்டபோதுதான் நாமும் திமிறி எழுந்தோம் என்பதையும் அதன் பயனாகவே 2007 ஆம் ஆண்டு ஹிண்ட்ராப் போராட்டம் வீதியில் இறங்கி நடத்தப்பட்டது என்பதையும் நீங்கள் அறிவீர்கள்.

கடந்த 17 ஆண்டுகளாக செம்பருத்தி மோகன் அவர்கள் மாவீரர் தினத்தை இங்கே கொண்டாடி வருகிறார்கள் என்றால் உலகத் தமிழர் யாராக இருப்பினும் அடிப்படை உணர்வு ஒன்றுதான் என்பதை நன்கு வெளிப்படுத்துவதாக உள்ளது. எந்த கோணத்தில் போராட்டம் நடத்தப்பட்டாலும் ஹிண்ட்ராப் தொடர்ந்து அப்போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்தும் பங்கெடுத்தும் வரும் என்பதை உறுதிப்படுத்துகிறேன் என வேதமூர்த்தி பேசினார்.