Font Size

Layout

Menu Style

Cpanel

இந்திய சமுதாயத்திற்கு 288 கோடி வெள்ளியா? அரசாங்கம் பொய்யுரைக்க வேண்டாம் : ஹிண்ட்ராஃப்

WAYTHAMOORTHY-AND-NAJIB-300x199.jpgகோலாலம்பூர்: கடந்த 2012-2014ஆம் ஆண்டுகளில் இந்திய சமூகத்திற்காக மட்டும் 288 கோடி வெள்ளியை செலவிட்டிருப்பதாக மத்தியக் கூட்டரசின் கருவூல பொதுச் செயலாளர் டான்ஸ்ரீ இர்வான் செரிகார் அப்துல்லா தெரிவித்த தகவல் அண்மைய தமிழ் நாளேடுகளில் வெளிவந்துள்ளது.

அத்துடன், இந்த ஆண்டிலும் இதுவரை 26 கோடி வெள்ளி, இந்திய சமூகத்திற்காக செலவிடப்பட்டதாகவும் அத்தகவல் தெரிவிக்கிறது.

இதுபோன்று உண்மைக்கு மாறான தகவலை ஊடகத்தின்வழி பரப்ப வேண்டாம் என்று ஹிண்ட்ராஃப் இயக்கத் தலைவர் பொ.வேதமூர்த்தி வெளியிட்ட அறிக்கையில் கேட்டுக் கொண்டுள்ளார்.

மலேசிய இந்திய சமூகத்தை மேம்படுத்த உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்ற வாக்குறுதியுடன் கடந்த ஏப்ரல் 18-ஆம் நாள் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிட்ட பிரதமர், அதை அப்பட்டமாக கைகழுவிவிட்டார். கடந்த நாற்பது ஆண்டுகளில் இந்திய சமூகம் புறக்கணிக்கப்பட்டதற்காக பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுக் கொள்வதாக அப்போது தெரிவித்த பிரதமர், ஹிண்ட்ராஃப் ஆதரவுடன் இதெல்லாம் சரி செய்யப்படும் என்றும் குறிப்பிட்டார். பதின்மூன்றாவது பொதுத் தேர்தல் முடிந்ததும் ஹிண்ட்ராஃப் இயக்கத்திற்கு துணை அமைச்சர் வாய்ப்பு அளிக்கப்பட்டது.

அப்போது, இந்திய சமுதாயம் பொருளாதார ரீதியில் உயர்வடையவும் இடம் பெயர்ந்த 8 இலட்சம் (தோட்டத்)தொழிலாளர்கள் தங்களின் வாழ்க்கையை சீரமைத்துக் கொள்ளவும் ஏதுவாக ஹிண்ட்ராஃப் சார்பில் ஒரு வரைவுத் திட்டத்தைத் தீட்டும்படியும் அதற்குரிய நிதி ஒதுக்கீடு அளிக்கப்படும் என்றும் வாக்குறுதி அளிக்கப்பட்டது.

ஆனால், துணை அமைச்சராக எட்டு மாதங்கள் நீடித்தும் எந்த நிதி ஒதுக்கீடும் இல்லாத நிலை நீடித்ததால், ஹிண்ட்ராஃப் அமைச்சரவையில் இருந்து வெளியேற நேர்ந்தது. ஆலய மேம்பாடு, ஏழை இந்தியர்களுக்கு கல்வி-வேலை வாய்ப்பு உறுதி யெல்லாம் பிரதமர் சார்பில் வழங்கப்பட்டது. கூடவே, ஆண்டுக்கு 25 இலட்சம் வெள்ளி நிதி ஒதுக்குவதாகவும் அதிகாரப்பூர்வமற்ற முறையில் ஒப்புக் கொள்ளப்பட்டது.

கடைசியில் ஒன்றும் நடக்கவில்லை; இன்றுவரை. இந்த மண்வாழ் இந்திய சமுதாயத்தின் அவலம் குறிப்பாக இளைஞர்களின் சீர்கேடு முன்னிலும் மோசமாக இருக்கிறது. எனவே, தேசிய முன்னணி ஆளுந்தரப்பினர் இனியும் இதைப்போன்று உண்மைக்கு மாறான தகவலை மலேசிய இந்திய சமூகத்தில் பரப்ப வேண்டாம் என்று ஹிண்ட்ராஃப் கேட்டுக் கொள்கிறது.

தேசிய முன்னணி இழுத்த இழுப்பிற்கு வர மறுத்த ஹிண்ட்ராஃப் இயக்கத்தை சாடுவதற்கு, தன் அரசியல் கூட்டாளி மஇகா-வை தேசிய முன்னணி பயன்படுத்தி வருவதை நாடு அறியும். ‘ஹஜ்’ யாத்திரை நிதி முறைகேடு கடந்த வாரம் வெளிச்சத்திற்கு வந்தது முதல் மலாய் சமூகத்தின் நம்பகத்தன்மையை தேசிய முன்னணி இழந்து நிற்கிறது. இதற்கு முன்னமே இந்திய சமுதாயத்தின் அவநம்பிக்கைக்கு ஆளாகி விட்டது இந்த அரசு.

கோயபல்ஸ் பாணியில், பொய்யை திரும்பத் திரும்பச் சொன்னால் அது மெய்யாகி விடும் என்பதெல்லாம் இனியும் பலிக்காது. எனவே, பொய்யுரைக்கும் வேலையை இந்த மட்டில் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று வழக்கறிஞருமான வேத மூர்த்தி வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

வேதமூர்த்தி
தலைவர், ஹிண்ட்ராஃப்
16-05-2015