Font Size

Layout

Menu Style

Cpanel

‘1எம்டிபி’-யைக் காக்கத்தான் ‘ஜிஎஸ்டி’யா? - ஹிண்ட்ராஃப்

anti gst.jpg‘ஜிஎஸ்டி’ என்னும் ‘பொருள் சேவை வரி’யை எதிர்த்தும் மக்கள் நலம் நாடியும் இன்று நடைபெறும் எதிர்ப்புப் பேரணிக்கு ஹிண்ட்ராஃப் இயக்கம் முழு ஆதரவைத் தெரிவித்துக் கொள்வதாக அதன் தலைவர் பொ.வேதமூர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

நாட்டில் நடுத்தர மக்களும் குறைந்த வருமானம் பெறும் மக்களும் இந்த பொருள் சேவை வரி அறிமுகத்தால் பெரிதும் அல்லல்படுகின்றனர் என்பது வெளிப்படையான உண்மை. ஊழியர் சேம நிதி வாரியம் வெளியிட்ட அறிக்கையின்படி, 2014-ஆம் ஆண்டு டிசம்பர் வரை, அதன் உறுப்பினர்களில் 89 விழுக்காட்டினர் மாத வருமானமாக 5,000.00 வெள்ளிக்குக் கீழ் பெறுகின்றனர். அதில், 30 விழுக்காட்டினர்(ஒரு கோடியே 42 இலட்சம் பேர்) 900.00 வெள்ளிக்கும் கீழ் வருமானம் பெறுகின்றனர்.

இப்படிப்பட்ட நிலையில், பொருள் சேவை வரி அமுலாக்கத்தினால், குறைந்த வருமானம் பெறும் மக்களின் செலவழிக்கும் ஆற்றல் வெகுவாக பாதிக்கும் என்பதில் சந்தேகமில்லை. எளிய மக்கள் தங்களின் வாழ்க்கையை சுமையாக உணரும் நிலையை இந்த அரசு ஏற்படுத்துகிறது. அத்துடன், மக்களின் வாழ்க்கைத் தரத்தை அரசே மறைமுகமாக குறைக்கிறது; பொருளாதார தட்டுப்பாட்டினால் மக்களின் மனநிலையும் விரக்தி நிலைக்குச் செல்கிறது என்பதுதான இப்போதைய உண்மை நிலை.

போதாக் குறைக்கு 72 லட்சம் மக்கள் ‘பிரிம்’ உதவித் தொகையைப் பெறுவதும், மக்களின் வருமான நிலையும் வாழ்க்கைத்தரமும் எந்த அளவிற்கு இருக்கிறது என்பதற்கு தக்க சான்றாகும். நாட்டின் தற்போதைய பொருளாதர நிலைமை, சராசரி மக்கள் ஏதாவது உதவி கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பில்தான் இருக்கின்றனர் என்பதை பளிச்சென சுட்டிக்காட்டுகிறது.

நாட்டில் ஒரேயொரு விழுக்காட்டு மக்கள்தான் ஏழ்மை நிலையில் உழல்வதாகக் கூறும் 2014 பொருளாதார மறுசீரமைப்புத் திட்ட அறிக்கையை ஹிண்ட்ராஃப் அடியோடு ஏற்கவில்லை. அரசின் இயலாமைக்கும் ஏனாதானோ மனப்பான்மைக்கும் இந்த அறிக்கை சரியான சான்றாகும். எல்லாவற்றுக்கும் மேலாக, இந்த பொருள் சேவை வரி அறிமுகம் செய்யப்பட்ட நாள் முதலே நிகழும் குழப்பங்களுக்கும் குளறுபடிகளுக்கும் குறைவில்லை. தெளிவில்லாத இத்தகைய நிலையை பெரும்பாலான வணிகர்கள், தங்களுக்கு சதகமாக பயன்படுத்திக் கொள்கின்றனர்.

பாதிப்பு என்னவோ பொது மக்களுக்குத்தான். மக்களின் வரிப்பணத்தைக் கொண்டு உருவாக்கப்பட்ட ‘1எம்டிப்’, மில்லியன் கணக்கான வெள்ளியை விழுங்கிவிட்ட நிலையில், இப்பொழுது ‘ஜிஎஸ்டி’ என்னும் கல்லையும் சுமக்கும்படி மக்களைக் கட்டாயப்படுத்துவது எந்த வகையில் நியாயம் என்று தெரியவில்லை. எனவே, மக்களின் மனதையும் வாழ்வையும் அழுத்தக் கூடிய இந்த ‘ஜிஎஸ்டி’ நடைமுறையை ஹிண்ட்ராஃப் ஏற்றுக் கொள்ளவில்லை என்பதுடன், இதற்கு ஆட்சேபம் தெரிவிக்கும் பேரணிக்கும் ஆதரவு தெரிவிக்கிறது என்று வழக்கறிஞருமான வேதமூர்த்தி நேற்று வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

பொ.வேதமூர்த்தி
தலைவர்-ஹிண்ட்ராஃப்