Font Size

Layout

Menu Style

Cpanel

ஹிண்ட்ராப் வழக்கு - சாதித்தார் வேதமூர்த்தி

muniady_kedah.pngவரும் 30 -மார்ச் -2015 அன்று லண்டன் உயர் நீதி மன்றத்தில் ஹிண்ட்ராப் தொடுத்த வழக்கு விசாரணைக்கு வருவதை அறிந்து மலேசிய இந்தியர்கள் குறிப்பாக வஞ்சிக்கபட்டவர்கள் மனதில் மீண்டும் ஒரு நம்பிக்கை ஒளி வீச தொடங்கியுள்ளதை நாம் உணர முடிகிறது.

மலேசிய வரலாற்றில் யாரும் நினைத்து பாரா வண்ணம் 2007-ம் ஆண்டு நவம்பர் 25 ல் நடைபெற்ற ஹிண்ட்ராப் பேரணியை நாம் எளிதில் மறக்க இயலாது. அன்று நம் உரிமைக்காக ரசாயண புகையும் தண்ணீரையும் பொருட்படுத்தாமல் கோலாலம்பூர் மாநகரத்தையே ஸ்தம்பிக்க வைத்தோம்.

நம் முன்னோர்களை ஒப்பந்த தொழிலாளர்களாக மலாயாவுக்கு அழைத்து வந்து நாடு சுதந்திரம் அடையும் போது, நம் உரிமைகளை பாதுகாக்கும் வண்ணம் அரசியல் சாசனத்தில் முறையாக குறிப்பிட தவறியதன் விளைவால் இன்று நாம் மூன்றாம் தர மக்களாக ஒதுக்கப்பட்டோம் என்பது மறுக்க முடியாத ஓர் உண்மை.

இதற்கெல்லாம் பிரிட்டிஷ் அரசாங்கம் தார்மிக பொறுப்பேற்க வேண்டும் என 30-8-2007 அன்று நமது சார்பாக திரு வேதமூர்த்தி வழக்கு பதிவு செய்தார் என்பது யாவரும் அறிந்ததே. அந்த வழக்கை முன்னெடுத்து செல்ல இரண்டு "குவின் கவுன்சல்" பிரிட்டிஷ் அரசாங்கமே நமக்கு ஏற்படுத்தி தரவேண்டும் என கோலாலம்பூரில் அமைந்திருக்கும் பிரிட்டிஷ் தூதரகத்துக்கு ஒரு மனு கொடுக்க பேரணியாக சென்றோம். அதை கொடுக்க விடாமல் இந்த அம்னோ அரசாங்கம் இரும்பு கரம் கொண்டு நம்மை அடக்க முயற்சித்தது.

ஆனாலும் நாம் எதற்காக போராடினோமோ அதன் நோக்கம் ஈடேற திரு வேதமூர்த்தி மிகவும் திறமையாகவும் சாமர்த்தியமாகவும் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் அளவு செயல் படுத்தி இருக்கிறார்.

இங்கிலாந்தின் மிகவும் புகழ் பெற்ற வழக்கறிஞரான திரு இம்ரான் கான் தலைமையில் இந்த வழக்கு நடைபெற அணைத்து ஏற்பாடுகளையும் திரு வேதமூர்த்தி செய்து கொடுத்திருக்கிறார். மிகவும் சிக்கலான இந்த வழக்கு பல விவாதங்களுக்கு பிறகு திரு இம்ரான் கானை சம்மதிக்க வைத்துள்ளார் என்பதே பெரிய விடயமாகும்.

உறக்கத்தையும் பசியையும் மறந்து பல நாட்கள் அரும்பாடு பட்டு வழக்கை இந்த நிலைக்கு கொண்டு வந்துள்ளார் என மிக சொற்பமான சிலருக்கே தெரியும். உலகை ஒரு நிமிடம் திரும்பி பார்க்க செய்த இந்த வழக்கு, அதற்குரிய ஆவணங்களை சேகரிக்கவே 5 ஆண்டுகளுக்கும் மேல் ஆகியது. ஏறக்குறைய 50 ஆயிரத்துக்கும் மேல் ஆவணங்கள் சேகரித்து அதனை ஆராய்ச்சி செய்து வழக்குக்கு தேவையான ஆதாரங்களை திரட்டுவது நினைத்து பார்க்க இயலாத ஒன்று. இதெல்லாம் ஒரு பொருட்டாக கருதாமல் எடுத்த முயற்சியை சாதித்தே தீருவேன் என மன உறுதியுடன் திரு வேதமூர்த்தி அன்று சொன்னதை இன்று செய்து காட்டினார்.

ஒரு பக்கம் வேதமூர்த்தி ஓடி விட்டார், வழக்கு போடுவதாக மக்கள் பணத்தை ஏமாற்றி விட்டார், லண்டனில் சொகுசாக வாழ்கிறார், நட்டாற்றில் நம்மை விட்டு விட்டார் என பல அரசியல் வாதிகள் தங்கள் அரசியல் சுய நலத்திற்காக மக்களை திசை திருப்பினர் என்பது இப்போதாவது அவர்கள் உணர வேண்டும். கூடவே இருந்து இவரின் நேர்மையை சோதித்தவர்களும் எண்ணிலடங்கா.

பல ஏமாற்றங்களும் துரோகங்களும் பழிச்சொற்களும் தனக்குள் ஏற்றுக்கொண்டு சாமானிய மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றினார். இவரை பற்றி மக்களிடம் பொய்யான தகவலை பரப்பிய நபர்களுக்கு இந்த வழக்கின் வழி சரியான சாட்டையடி கொடுத்திருக்கிறார். பல சந்தேகங்களுக்கும் முற்றுப்புள்ளி வைத்துள்ளார் என்பது இங்கே நாம் உணர வேண்டும். ஆகவே ஓர் உன்னதமான நோக்கத்துடன் தொடுத்த இந்த வழக்கை யாரோ ஒருவர் யாருக்காகவோ செய்கிறார் என மனப்போக்கினை தூக்கி எறிந்து, இந்த வழக்கு வெற்றிப்பெற எல்லாரும் ஒன்றிணைந்து பிரார்த்தனை செய்வோம்.

இந்த வழக்கு வெற்றி அடைந்தாலும் சரி அல்லது தோல்வி அடைந்தாலும் சரி, இரண்டையும் நாம் ஏற்று கொள்ளதான் வேண்டும். ஏனெனில் வழக்கு அடுத்த கட்ட விசாரானைக்கு சென்றால் நமக்கு இழைக்கப் பட்ட கொடுமைகளுக்கும் இழந்த உரிமைகளுக்கும் அதற்குரிய தீர்வு கிடைக்கும் என்பதை நாம் நம்பலாம். வழக்கு நமக்கு சாதகமாக அமையாவிடில் அடுத்த தலைமுறைக்கு ஒரு விலை மதிப்பில் அடங்கா பொக்கிஷமாக இவர் சேகரித்த ஆவணங்களை கொடுத்து இந்த உரிமை போராட்டத்தை முன்னெடுக்க வகை செய்யலாம்.

முனியாண்டி பொன்னுசாமி
தலைவர் ஹிண்ட்ராப் கடாரம்.